கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் தரப்பில் கடுமையான அலட்சியமும் கடமை தவறிய போக்கும் இருந்துள்ளது என்று நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனைக்கு பெயர் போன பகுதிகளிலும் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவே உயிரிழப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது என கூறியுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட பகுதிகளின் அதிகார வரம்பைக் கொண்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகளே இதற்கு பொறுப்பு என்றும்,
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராப்பாளையம் வட்டங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர்களே இந்நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு முதல் 2024 வரை பணியாற்றிய சம்பவத்திற்கு பொறுப்பான பல்வேறு பதவிகளை வகித்துவந்த அதிகாரிகள் மீது துறை சார்ந்த விசாரணையை தொடங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கல்வி கற்ற திறன்மிக்க திறன்சாரா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்க கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரையும் செய்துள்ளது.
















