ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அதேபோல், கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்தது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பெருந்துறை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார், தன்னுடைய வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதித்த தடையை நீட்டிப்பதில் நியாயமில்லை என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் வழக்குகள் நிலுவையில் இல்லாத இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும்,
பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கை நிராகரித்த உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே , தடையை நீக்க வேண்டும் என கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்க விதித்த தடையை நீக்க முடியாது என தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
அதுவரை இடைத்தேர்தலை அறிவிக்க தடையை நீட்டிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
















