RSS தலைவர் மோகன் பகவத்தின் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து சுற்றுப் பயணங்கள் தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு RSS-ன் ஊடகப் பிரிவு மற்றும் அகில உலகப் பிரச்சாரத் தலைவரான சுனில் அம்பேகர் பதிலளித்துள்ளார். இந்துத்வா மற்றும் பாரதம் குறித்து மேற்கத்திய நாடுகளில் நிலவும் தவறான புரிதல்களை நீக்க மோகன் பகவத்தின் பயணம் உதவும் என்று அவர் கூறியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
RSS-ன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர் மோகன் பாகவத் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் இறுதிக் கட்டமாக லண்டன் வந்தடைந்த RSS தலைவர் மோகன் பாகவத்துக்கு, கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பிரிட்டன் ஹிந்து அமைப்புகள் சார்பில் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
எதிர்காலம் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்டதில் மகிழ்ச்சி என்று தனது எக்ஸ் பக்கத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக RSS தலைவர் மோகன் பாகவத்தின் வருகை பிரிட்டனின் குடிவரவு விதிகளுக்கு உட்பட்டே அமைந்துள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் டான் ஜார்விஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையே RSS ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் நியூயார்க் மேயர் மம்தானி செய்ததைப் போலவே,மோகன் பகவத்தின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று லண்டன் மேயர் சாதிக் கானுக்கு 20 சமூக அமைப்புகள் கடிதம் எழுதியிருந்தன.
இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் RSS -ன் ஊடகப் பிரிவு மற்றும் அகில உலகப் பிரச்சாரத் தலைவரான சுனில் அம்பேகர், அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறு தரப்பிலிருந்து மாறுபட்ட குரல்களும், கருத்துகளும் எழுவது மிகவும் சாதாரணமான விஷயம் என்று கூறியுள்ள சுனில் அம்பேகர், இதனால் தாங்கள் அதிர்ச்சியடையவில்லை என்றும், விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் யார், என்ன நினைக்கிறோம், எப்படிச் சிந்திக்கிறோம், எங்கள் உலகப் பார்வை என்ன என்பதைத் தெரிவிப்பதற்காகவே இங்கு வந்துள்ளோம் என்றும் மிகவும் வெளிப்படையாகவே இருப்பதால் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் விளக்கியுள்ளார்.
விமர்சிப்பவர்களுடன் ஆரோக்கியமான விவாதத்திற்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் எப்போதும் RSS தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள சுனில் அம்பேகர், லண்டன் மேயர் சாதிக் கான் மற்றும் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி ஆகியோருக்கு சிவில் அமைப்புகள் எழுதிய கடிதங்கள் மற்றும் எதிர்ப்புகள் குறித்து கேட்டதற்கு தங்கள் கருத்துக்களைத் தாராளமாகப் பேசட்டும், அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று பதிலளித்துள்ளார்.
பாரதம் என்பது வெறும் அரசியல் ரீதியான தேசம் அல்ல, அது ஒரு பண்பாட்டுக் கருத்துருவம் (Cultural Concept) ஆகும் என்றும், ‘இந்துத்வா’ என்பது மற்ற மதங்களை விலக்கும் அமைப்பல்ல; அது அனைத்து மத நடைமுறைகளையும் மதிக்கும் ஒரு பரந்த கோட்பாடு என்றும் கூறியுள்ள சுனில் அம்பேகர்,
RSS தலைவர் மோகன் பகவத்தின் இந்த உலகளாவிய பயணம், இந்துத்வா மற்றும் பாரதம் குறித்து மேற்கத்திய நாடுகளில் நிலவும் தவறான புரிதல்களை நீக்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
















