இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலம் டோனா பவுலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத எண்ணங்கள் கணிசமாக குறைந்து, தற்போது வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக கூறினார். ஐந்து தசாப்தங்களாக நீடித்த நக்சல் பிரச்னை தற்போது கடந்த கால நினைவாக மாறிவிட்டதாகவும் அமித்ஷா தெரிவித்தார். திருப்பதி முதல் பசுபதிநாத் வரை நீண்டிருந்த ‘ரெட் காரிடார்’ கனவு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதம் ஏந்திய பலர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.
















