சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எண்ணூர் முதல் கோவளம் குப்பம் வரையிலான மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மீனவர் குடியிருப்பு பகுதிகளை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றும், லூப் சாலையோர கடற்கரையை மீன்பிடித் தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அடுத்த 5 நாட்களுக்குள் அரசாணையை முதலமைச்சர் திரும்பப் பெறாவிட்டால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
















