உக்ரைன் போரில் பாதிக்கும் மேற்பட்ட F-16 போர் விமானங்கள் பராமரிப்பு தாமதங்களால் தற்காலிகமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பருக்குள் F-16 போர் விமானங்கள் முழுவதுமாக செயலிழந்து விடும் என்று கூறப்படுகிறது. வான்-பாதுகாப்பு ஏவுகணைகளின் கடுமையான பற்றாக்குறையால், நெருக்கடியில் சிக்கியுள்ள உக்ரைன், உலக நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு மிக முக்கியமான பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நவீன போர் விமானங்களைக் கொண்டிருப்பது மட்டுமே போரின் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. ஒரு நீடித்த போரின்போது அந்த போர் விமானங்களைத் தொடர்ந்து பறக்க வைப்பதும் ஆயுதம் ஏந்திய நிலையில் வைத்திருப்பதும் மிக மிக முக்கியமானதாகும்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் ரஷ்யா- உக்ரைன் போரில், உக்ரைனின் பாதிக்கும் மேற்பட்ட F-16 ரக போர் விமானங்கள் பராமரிப்பு மற்றும் ஏவுகணைப் பற்றாக்குறை தொடர்பான குறிப்பிடத்தக்க சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
இதுவரை சுமார் 50, F-16 விமானங்களைப் பெற்றுள்ள உக்ரைன் நடைபெற்று வரும் ரஷ்ய போரில் 5, F-16 விமானங்களை இழந்துள்ளது.
பயிற்சிக்காக வெளிநாடுகளில் உக்ரைனின் சில F-16 விமானங்கள் உள்ள நிலையில் , பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் மேலும் 110 விமானங்களைத் தருவதாக அந்நாட்டுக்கு உறுதியளித்துள்ளன.
இதற்கிடையே ரஷ்யாவின் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் அதிநவீன ட்ரோன்களுக்கு எதிராகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் AIM-9 சைடுவைண்டர் மற்றும் AIM-120 ஆம்ராம் ஏவுகணைகளின் பற்றாக்குறையாலும் உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான ஏவுகணைகள் இல்லாத நிலையில் உக்ரைனின் போர் விமானிகள் F-16 விமானத்தின் 20மிமீ பீரங்கியையே அதிகளவில் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கூடுதல் பீரங்கித் தோட்டாக்களையும் தேடி வரும் உக்ரைன், ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் சப்சோனிக் குரூஸ் ஏவுகணைகளுக்கு எதிராக, லேசர் வழிகாட்டப்பட்ட 70மிமீ APKWS II ராக்கெட்டுகளைப் பயன்படுத்த முன்வந்துள்ளதாக கூறப் படுகிறது.
உள்நாட்டு ஆயுத உற்பத்தியின் அத்தியாவசியத் தேவையை ரஷ்ய போரில் உக்ரைன் உலக நாடுகளுக்குக் கற்று தருகிறது.
தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஒரு போரில், வெறும் நவீன ஆயுதங்களை மட்டும் நம்பியிருப்பது போதாது என்பதை உக்ரைன் நெருக்கடி உணர்த்தியுள்ளது.
ஏற்கெனவே அஸ்த்ரா போன்ற வான்-வழியே பாயும் ஏவுகணைத் திட்டங்களை இந்தியா தீவிரமாக முன்னெடுத்துள்ளது.
உள்நாட்டிலேயே வடிவமைத்து DRDO உருவாக்கிய ‘அஸ்த்ரா மார்க்-1’ (Astra Mk-I) என்ற அதிநவீன ஏவுகணைகள் இந்திய விமானப்படையின் சுகோய் (Su-30MKI) போன்ற போர் விமானங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலக்கு வரம்பு 100 கிலோமீட்டருக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
2022-ல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்துடன் 2,971 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படைக்கு ‘அஸ்த்ரா மார்க்-1’ (Astra Mk-I) எனப்படும் காட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட வான்வழி ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி DRDO வும் இந்திய விமானப்படையும் இணைந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Radio Frequency Seeker தொழில்நுட்பத்துடன் கூடிய அஸ்த்ரா ஏவுகணையை Su-30 MKI போர் விமானம் மூலம் ஒடிசா கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாகச் சோதனை செய்தன.
அதிவேகமாகச் சென்ற இரண்டு ஆளில்லா வான்வழி இலக்குகளை வெவ்வேறு தொலைவுகளில் வைத்து இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது. குறிப்பாக ரஷ்யாவின் Agat Radio Frequency Seeker தொழில்நுட்பத்திற்குப் பதிலாக, முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட Ku-band pulse Doppler RF seeker இதில் பயன்படுத்தப்பட்டது.
ஒரு விமானப்படையின் உண்மையான போர்த் திறன் என்பது, அது கொண்டிருக்கும் போர் விமானங்களின் எண்ணிக்கையை மட்டும் சார்ந்தது அல்ல; ஒரு நீடித்த போரில் விமானங்களுக்குத் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கும் திறனையும் பொறுத்ததாகும்.
இதனாலேயே அஸ்த்ரா ஏவுகணை சோதனையின் வெற்றி, வான்வழிப் போர்களில் Atmanirbhar Bharat இலட்சியத்தின் வெற்றியாக பார்க்கப் படுகிறது.
உள்நாட்டு உற்பத்தி, ஆயுதங்களை மீண்டும் நிரப்புதல், சேமித்து வைத்தல் மற்றும் எதிர்கால மேம்பாடுகள் ஆகியவற்றின் மீது இந்தியாவிற்கு மிகப் பெரிய கட்டுப்பாட்டை Atmanirbhar Bharat இலட்சியமே அளித்துள்ளது.
மேலும் ஒரு போர் நெருக்கடியின் போது வெளிநாட்டு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போட்டி நிறைந்த உலகளாவிய தேவை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பையும் இது குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
















