மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்கள் ஏற்கும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் வேறு கட்சி சார்பாக போட்டியிடும் அந்த வேட்பாளர்கள் இடைத்தேர்தலுக்கான செலவை வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உரிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுவரை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
















