ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் குறிவைத்து 27 நிறுவனங்கள், 6 தனிநபர்கள் மற்றும் 22 கப்பல்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதில் மும்பையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கும், ஐந்து இந்தியர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆகஸ்ட்டில் Operation Economic Outcast என்று ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியது.
ஈரானின் “நிழல் கப்பல் படை” மூலம் சர்வதேச நாடுகளுக்கு சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தப்படுவதைத் தடுக்கவும், அதன் மூலம் ஈரானுக்குக் கிடைக்கும் வருவாயை முடக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் கப்பல்களுக்கும் எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ய உதவியதாகக் குற்றம்சாட்டி மும்பையைச் சேர்ந்த SSPL Solutions Private Limited மற்றும் Samudra Marine Services Private Limited ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்கள் மீதும் அவற்றுடன் தொடர்புடைய ஐந்து இந்தியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இந்தத் தடைகளின் கீழ் இந்தியா தவிர, துருக்கி, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மார்ஷல் தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கப்பல் ஆபரேட்டர்கள் மற்றும் கடல்சார் மேலாண்மை நிறுவனங்களும் குறிவைக்கப்பட்டுள்ளன.
ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, மேலும் தடைகள் விதிக்கப்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும், நிதிமோசடி மற்றும் இந்தத் தடைகளைத் தவிர்ப்பதற்கு உதவுபவர்கள் அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து வெளியேற்றப் படுவார்கள் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதாவது இந்தத் தடையை மீறும் செயல்ககளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் நடத்தப்பட்டு உரிய தண்டனைகள் தரப்படும் என்றும், மேலும் இரண்டாம் நிலைத் தடைகளும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஈரான் அரசின் எண்ணெய் விற்பனைக்குத் துணை போகும் எவரும் அமெரிக்காவின் இந்த முழுமையான பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்ப முடியாது என்று எச்சரித்துள்ள அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தத் தடை மீறல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு முழுமையாக முறியடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
















