தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள காலை உணவுத் திட்டம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் சக்கரை பொங்கலை பரிமாறினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் விஜய் உணவு உட்கொண்டார். அப்போது அருகிலிருந்த மாணவியிடம் சாப்பிடலாமா எனக் கேட்டு உணவருந்தியதும், சாப்பிட்ட தட்டை அவரே எடுத்துச் சென்றதும் பலரது கவனத்தை ஈர்த்தது.
பின்னர் பள்ளியின் ஒவ்வொரு அறையாக சென்று, பார்வையிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், உணவின் தரம் குறித்து மாணாக்கரிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தண்ணீர் கேட்ட மாணவருக்கு, தண்ணீரையும் பெற்றுக் கொடுத்தார்.
சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய 2 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலை உணவு விரிவாக்கத் திட்டம் அமலுக்கு வந்தது.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44 ஆயிரத்து 984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணாக்கர்கள் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்துக்காக கூடுதலாக 217 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரை பார்க்க, பள்ளிக்கு வெளியே கூட்டம் அலைமோதிய நிலையில், அவர்களை நோக்கி கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக மாணாக்கரின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்து, சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஏதுவாக சத்தான, சுவையான காலை உணவு இன்று முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார்.
விருதுநகரில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டத்தை, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களிடையே பேசிய எம்எல்ஏ செல்வம், பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறை உணவின் தரத்தை ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றும், கல்வி மட்டுமே வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை வேளாண் துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையாததால் முறை பாசனத்தை நீக்குவது குறித்து சில நாட்களில் நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிடுவார்கள் என தெரிவித்தார்.
மேலும், கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பணிகள் முடிந்ததும் தண்ணீர் திறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அமைச்சர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
உணவுகளை பரிமாறிய இருவரும் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
கோவை ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய அமைச்சர், மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும், மாணவர்களுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையோடு, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 501 பள்ளிகளில் பயிலும் 56 ஆயிரத்து 560 மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப்பட்டியில், உள்ள அரசு பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறிய அமைச்சர், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், காமராஜர் பெயரில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த நடைமுறைப்படுத்திய முதலமைச்சசருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். காமராஜரை போன்று ஊழல் இல்லாத நல்லாட்சியை முதலமைச்சர் விஜய் வழங்கி வருவதாகவும் பாராட்டினார்.
















