புதுடில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இந்தக் கூட்டணி உருவாகி, 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வாஜ்பாய், அத்வானியால் உருவான இந்தக் கூட்டணியை, பிரகாஷ் சிங் பாதல், பாலசாகேப் தாக்கரே, அஜித் சிங், சரத் யாதவ் போன்ற தலைவர்கள் மெருகேற்றினர்.
நம் நாட்டில் கூட்டணி அமைப்பது பாரம்பரியமாக உள்ளது. ஆனால், எதிர்மறையான நோக்கத்துடன் உருவாக்கப்படும் கூட்டணி வெற்றி பெற்றதில்லை. கடந்த 1990களில் நாட்டை ஸ்தம்பிக்க வைக்க, அரசுகளை உருவாக்கவும், கவிழ்ப்பதற்காகவும் காங்கிரஸ் அமைத்த கூட்டணி தோல்வி அடைந்தது.
அதே நேரத்தில், 2014க்கு முன் அமைக்கப்பட்ட காங்கிரஸ் கூட்டணி அரசு, முழு ஆட்சிக்காலம் பதவியில் இருந்தது. ஆனால், கொள்கைகள் முடங்கின; அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தது. பிரதமருக்கு மேல் ஓர் அதிகார மையம் இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்டாயத்தால் உருவான கூட்டணியல்ல; பங்களிப்பை உணர்த்தும் கூட்டணி. கூட்டணியின் சிறந்த பங்களிப்பில், இதில் உள்ள அனைவருக்கும் பெருமை உண்டு.
இந்தக் கூட்டணியானது, பல்வேறு மாநிலங்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய, அழகான வானவில் போன்றது. மற்ற எல்லாவற்றையும்விட, நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கே எப்போதும் முக்கியத்துவம் தருகிறது. எந்தவொரு கட்சிக்கு எதிராகவும் இந்த கூட்டணி அமைக்கப்படவில்லை; நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக உருவாக்கப்பட்டது.
மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா ஆகியோர் போதித்த சமூக நீதியின் பாதையில், இந்தக் கூட்டணி பயணித்து வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி தன்னை அர்ப்பணித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியானது, இந்திய மக்களை ஒற்றுமைப் படுத்துகிறது; ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, மக்களை பிளவுபடுத்துகிறது. நாங்கள் நிகழ்காலத்துக்காக மட்டும் பணியாற்றுவதில்லை; சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் பாடுபடுகிறோம். கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் வரை, அரசு நிர்வாகத்தில், அரசு அலுவலகங்களில் சுதந்திரமாக சுற்றி வந்த தரகர்களை துாக்கி எறிந்துள்ளோம்.
அரசியலில் போட்டிகள் இருக்கலாம்; பகைமை இருக்கக் கூடாது. ஆனால், எதிர்க்கட்சிகள், நமக்கு எதிராக அவதுாறான கருத்துகளைத் தெரிவிப்பதுடன், நம்மை வீழ்த்த நினைக்கின்றன. எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தபோதும், பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதையும், முலாயம் சிங், சரத் யாதவ் ஆகியோருக்கு பத்ம விருதுகளை வழங்கி இந்தக் கூட்டணி அரசு அழகு பார்த்தது.
சுயநல அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கலாம்; ஆனால், இணைந்திருக்க முடியாது. மக்களின் அறிவுத்திறன் குறித்து எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிட்டுள்ளன. எதற்காக இந்தக் கட்சிகள் தற்போது கூட்டணி அமைத்துள்ளன என்பது மக்களுக்கு தெரியும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.
வரும் 2024 லோக்சபா தேர்தலில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டுகளை பெறுவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர். இந்த மக்கள் சக்தியை, உலக நாடுகளும் அறிந்துள்ளன. இந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என்பது மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உரையாற்றினார்.