அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார்.
மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுல் காந்தி, மறுபிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். அதில், தான் குற்றமற்றவன் என்றும், இதற்காக தான் ஒருபோதும் மன்னிப்புக் கேட்க முடியாது என்றும், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு நிலைக்கத்தக்கதல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
மேலும், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்வதோடு, தன்னை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மக்களவை செயலகம், கடந்த 4-ம் தேதி வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்க அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது. அவர் மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக தொடரலாம் என்று அறிவித்தது. இதையடுத்து, 137 நாட்களுக்குப் பிறகு இன்று காலை ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை. ஆகவே, ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டதாகக் கருதி கொண்டாடுவது ஜனநாயகத்தை அவமதிப்பது போன்றது மற்றும் துரதிருஷ்டவசமானது” என்று கூறியிருக்கிறார்.