மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்கணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் மோடி, “உறுதியான இந்தியா தனக்கான பணிகளை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பாக முந்தைய அரசு கடந்த 25 ஆண்டுகளாக விவாதித்து வந்தது. ஆனால், தற்போதைய அரசு அதை கட்டி முடித்திருக்கிறது. இதுதான் புதிய இந்தியா. இது தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா.
அதேசமயம், ஊழல், வாரிசு அரசியல், கொள்கைகளில் சமரசம் ஆகியவை இந்தியாவின் திறனை மோசமாக பாதிக்கிறது. ஆகவே, இம்மூன்றையும் எதிர்த்து போராடுவது தற்போதைய தேவையாக இருக்கிறது. ஒரு அரசியல் கட்சிக்கு ஒரே குடும்பம் மட்டும் எப்படி பொறுப்பாக இருக்க முடியும். ஆகவே, ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவதுதான் எனது வாழ்நாள் அர்ப்பணிப்பாக இருக்கும்.
எனது தலைமையிலான ஒவ்வொரு அமைச்சகங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை திறம்பட செய்து வருகின்றன. மேலும், பெரும்பான்மை அரசினால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியும். அந்தவகையில், எனது தலைமையில் பெரும்பான்மை அரசு அமைந்ததால் சீர்திருத்தங்களை செய்ய எனக்கு நம்பிக்கை கிடைத்தது. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. வளரச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்.
நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, 2047-ல் இந்தியாவின் வளர்ச்சியானது வளர்ந்த நாடுகளைப்போல இணையற்றதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இதை நான் சொல்லக் காரணம், எனது நாட்டின் திறன் மற்றும் வளங்களின் அடிப்படையில்தான். ஆகவே, வரும் 5 ஆண்டுகள் கனவை நனவாக்கும் பொன்னான தருணமாகும். அடுத்த ஆண்டு நான் செங்கோட்டையில் கொடியேற்றும்போது நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சியை முன்வைப்பேன்.
கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் வன்முறை அலை வீசியது. பலரும் தங்களது உயிரை இழந்தனர். எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அவமானப்படுத்தப்பட்டனர். மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. தற்போது அப்பகுதியில் அமைதி திரும்பி வருகிறது. மணிப்பூர் மக்களுடன் இந்த நாடே நிற்கிறது. மணிப்பூர் வன்முறைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும்.
அதேபோல, இந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இயற்கை பேரிடர்கள் பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.