4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்து 4 விண்வெளி வீரர்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 4 விண்வெளி வீரர்களுடன் பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து, டிராகன் விண்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இந்நிலையில், பூமியில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்ததாக நாசா அறிவித்துள்ளது.
இதில் நாசா விண்வெளி வீரர் மற்றும் மிஷன் கமாண்டர் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் பயணித்தனர். இந்த 4 விண்வெளி வீரர்களும் 6 மாத காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு விண்வெளி வீரர்களும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.