அமெரிக்க ஆய்வு மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 80 சதவிகித இந்தியர்களின் ஆதரவு இருப்பது தெரியவந்திருக்கிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு பியூ (PEW) என்கிற ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வு மையம், சமூக பிரச்னைகள், பொதுக்கருத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி வருகிறது.
இந்த ஆய்வு மையம் பிரதமர் நரேந்திர மோடி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறித்து கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முதல் மே மாதம் 22-ம் தேதி வரை கருத்துக் கணிப்பு நடத்தியது.
இதற்காக இந்தியாவைச் சேர்ந்த 2,611 பேர் உட்பட மொத்தம் 24 நாடுகளைச் சேர்ந்த 30,861 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில்,பிரதமர் மோடி பற்றியும் , இந்தியா மீதான பிற நாடுகளின் பார்வைகள் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
இதில், 46 சதவிகிதம் பேர் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா மீது நம்பிக்கை உள்ளது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், 2-வது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கான ஆதரவு குறித்து கேட்கப்பட்டக் கேள்விக்கு, 80 சதவிகித இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இதில், 55 சதவிகிதம் பேர் பிரதமர் மோடி மீதான தங்களது அமோக ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அதாவது, கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 10-ல் 8 பேர் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோல, சமீப காலமாக இந்தியாவின் செல்வாக்கு பன்மடங்கு உயர்ந்திருப்பதாக 10-ல் 7 பேர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், இந்த கருத்துக் கணிப்பின் மூலம், இஸ்ரேல் நாட்டு மக்கள், இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் அதிக நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அந்நாட்டைச் சேர்ந்த 71 சதவீதம் பேர் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, “பியூ கருத்துக் கணிப்பின்படி, பிரதமர் மோடியின் புகழ் இன்னும் அப்படியே உள்ளது. இந்தியா உட்பட உலகமெங்கும் பெரும்பான்மையான மக்கள் இந்தியாவை நம்புகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது.
The popularity of Prime Minister Shri @narendramodi certainly remains intact!
Majority of people in India and across the world believe that India's global influence is getting stronger!
A recent survey (spanning the February 2020 to May 2023 period) conducted across 24… pic.twitter.com/0PJfHTYEpa
— BJP (@BJP4India) August 30, 2023