ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த 29-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் எப்போது சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அது தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 31-ம் தேதி அளிப்பதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்தப் பணி முடிவடைய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம். இப்பணி முடிந்ததும் தேர்தல் நடத்துவதுக குறித்து தேசிய தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தேர்தல் கமிஷன் இணைந்து முடிவு செய்யும்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து அளவிலும், தொடர்ந்து நகராட்சி அளவிலும், இதன் பின்னர் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் லே பகுதியில் முடிந்து விட்டது. கார்கில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என்று காலவரையறை சொல்ல முடியாது. முழு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான். 370-வது பிரிவை நீக்கிய பிறகு தீவிரவாதம் தொடர்பான செயல்கள் 45.2 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஊடுருவல் 90.2 சதவிகிதம் குறைந்திருக்கிறது” என்று துஷார் மேத்தா கூறினார்.