தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகர அவசர மேலாண்மை சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இரவு ஏற்பட்ட இத்தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தீயணைப்புப் படையினர் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். உண்மையில் ஜோகன்னஸ்பர்க் நகரத்திற்கு இது ஒரு சோகமான நாள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்கும் நான், இது போன்ற சம்பவத்தை சந்தித்ததில்லை. கடந்த ஜூன் மாதம் நகரிலிருந்த பழைய கட்டடம் தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். நகரிலுள்ள பாழடைந்த கட்டடங்களில் சிலர் சட்ட விரோதமாகக் குடியேறி இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக வெளியேற்ற இருக்கிறோம்.” என்று தெரிவித்திருக்கிறார்.