தாஜ்மகால் ஷாஜஹானால் கட்டப்பட்டது அல்ல, அது மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. எனவே, வரலாறை திருத்தி எழுத வேண்டும் என்று இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது தாஜ்மகால். முழுக்க முழுக்க பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இக்கட்டடம் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. மேலும், இந்த தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியதாக வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.
இதைத்தான் மாணவர்கள் இன்றுவரை படித்து வருகிறார்கள். ஆனால், இக்கட்டடம் மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை என்றும், இக்கட்டடத்தின் அடித்தளத்தை சோதித்துப் பார்த்தால் உண்மை தெரியும் என்று இந்து அமைப்புகள் நீண்டகாலமாகவே கோரி வருகின்றன.
அதேபோல, தாஜ்மகாலின் அடிப்பகுதியில் இருக்கும் ரகசிய அறைகளையும் திறந்து பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், இதற்கு இதுவரை மத்திய அரசும், நீதிமன்றங்களும் செவிசாய்க்கவில்லை.
இந்த நிலையில்தான், தாஜ்மகால் விவகாரம் தொடர்பாக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில், முகலாய மன்னர் ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டவில்லை. அது மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. இதைத்தான் ஷாஜஹான் சீரமைத்தார். ஆகவே, வரலாறை மாற்றி எழுத வேண்டும் என்று சுர்ஜித் யாதவ் கோரி இருக்கிறார்.