ரஜினிகாந்த் தமிழ் மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவை என்னென்ன என்று தெரியுமா?
SUPER STAR, STYLE SAMRAT ரஜினிகாந்த். ஒரு கதாநாயகனுக்கான எந்த பிம்பமும் இல்லாதவர். எனினும் அவர்தான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் கதாநாயகன். இன்றைக்கு அடுத்த SUPER STAR-ஆகவும், அரசியலுக்கு வரவும் ஆசைப்படும் நடிகர்கள் அவரது பாதையைத்தான் பின்பற்றுகிறார்கள்.
“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்” என்ற பாடலுக்கு ஏற்ப ரஜினி நடித்த தமிழ்ப் படங்களைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம். ஆனால், தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி ஆகிய இந்திய மொழி திரைப்படங்களிலும் ஹாலிவுட்டிலும் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அவர் நடித்த முதல் தெலுங்குப்படம் ‘அவள் ஒரு தொடர்கதை’-யின் தெலுங்கு ரீமேக்கான ‘அந்துலேனி கதா’. தமிழைப் போலவே தெலுங்கிலும் ரஜினியை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். இதுவே கமல்ஹாசனுக்கும் முதல் தெலுங்குப்படம்.
‘அடிமகள்’ மலையாள திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘சிலகம்மா செப்பிண்டி’-தான் டோலிவுட்டில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படம். ‘அடிமகளின்’ தமிழ்ப்பதிப்பான ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் ரஜினியின் நண்பராக கமல் நடித்தார்.
‘சிலகம்மா செப்பிண்டி’-யைத் தொடர்ந்து தெலுங்கில் ரஜினி நடித்த ‘தொலிரேயி கடிச்சிண்டி’, ‘ஆமே கதா’ திரைப்படங்கள் 1977-ஆம் ஆண்டு வெளியாகின. அதற்கடுத்து ‘அண்ணாடமுல்லா சவால்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வயசு பிலிசிண்டி’, ‘இதார் அசாதயலே’, ‘டைகர்’, ‘நியாயம் மிரே செப்பாலி’, ‘பெத்தராயுடு’ போன்ற படங்களில் நடித்தார். இதில் ‘டைகர்’ ரஜினியின் 50-ஆவது திரைப்படம்.
ஆந்தாலஜி தொடர் மூலம் கன்னடத் திரையுலகில் கால்பதித்தார் ரஜினிகாந்த். ‘கத சங்கமா’ ஆந்தாலஜியில் ‘முனிதாயி’ என்ற பாகத்தில் வில்லனாக நடித்திருந்தார். ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தின் கன்னட ரீமேக்கான ‘பாலு ஜெனு’, ‘ஒண்டு பிரேமட கதே’ , ‘கும்குமா ரக்ஷே’ ‘ கலாட்டா சம்சாரா’, ‘கில்லாடி கிட்டு’, ‘மாது தப்பட மக’ ஆகிய கன்னட திரைப்படங்களில் ரஜினி நடித்துள்ளார்.
அவர் பாலிவுட்டில் நுழைய காரணமாக இருந்த படம் ‘அந்தா கணோன்’. ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக். அதன்பிறகு ‘பிவஃபாய்’, ‘பகவான் டாடா’, ‘அசிலி நாக்லி’, ‘தோஸ்தி துஸ்மணி’ ஆகிய திரைப்படங்கள் மூலம் ஹிந்தி திரையுலகில் பிரபலமானார். 1987-ல் ஜாக்கி ஷெரெஃப்புடன் இணைந்து ‘உத்தர் தக்ஷின்’, 1991-ல் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து ‘ஹும்’ போன்ற படங்களில் நடித்தார்.
இதே போல் சஞ்சய் தத்துடன் இணைந்து ‘கூன் கா கர்ஸ்’ படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் ‘தர்மதுரை’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘தியாகி’, ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தின் பாலிவுட் பதிப்பான ‘கேங்வா’-விலும் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
‘பக்யா தேபடா’ என்கிற பெங்காலி திரைப்படத்திலும், ‘பிளட் ஸ்டோன்’ என்கிற ஹாலிவுட் படத்திலும் ரஜினி நடித்துள்ளார்.
இன்றைக்கு PAN INDIA படங்கள் என்ற பெயரில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முக்கிய நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைக்கும் TREND உள்ளது. இதற்கெல்லாம் முன்பே ரஜினியின் தமிழ்ப்படங்கள் பிற மொழிகளில் DUB செய்யப்பட்டு வசூலில் சக்கைபோடு போட்டிருக்கின்றன. அதற்கு காரணம், அவர் SUPER STAR மட்டுமல்ல PAN INDIA STAR என்பதே.