PM SHRI திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுப்பதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 PM SHRI பள்ளிகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறினார். PM SHRI திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு, மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். PM SHRI திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுப்பதாகவும் விமர்சித்தார்.
தமிழக பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் கற்றல் திறனை மேம்படுத்த PM SHRI பள்ளிகள் மிகவும் அவசியம் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டினார்.