நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் இயங்கிவரும் அரசுப் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாழையூத்துப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் சோதனை செய்தனர்.
அப்போது 10-ஆம் வகுப்பு மாணவனின் பையில் அரிவாள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அரிவாள் எடுத்துவந்த மாணவர் உள்பட 2 மாணவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மாணவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததும், சக மாணவனை மிரட்டுவதற்காக அரிவாள் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் இருவரும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.