கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே மகாத்மா காந்தியின் உருவ சிலையை மர்ம நபர்கள் உடைத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பேசுபொருளாகியுள்ளது.
மருதங்கோடு பகுதியில் செயல்பட்டு வந்த இரணியல் சர்வோதய சங்கம் தற்போது பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு உள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்த சங்க கட்டிட வளாகத்தில் காந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மண்டபத்தில் உள்ள காந்தியடிகளின் சிலை கடந்த 4 நாட்களாக உடைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. மர்ம நபர்கள் காந்தி சிலையின் தலைப்பகுதியை உடைத்தெறிந்துள்ளனர்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவலளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், தேச விரோத செயலை செய்த நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.