பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து அரங்கேறும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ராஜினாமா செய்யக்கோரும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அவல நிலை குறித்தும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான இணையத் தாக்குதல்களின் பின்னணி குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பள்ளிக்கல்வித்துறை மீதும், அதன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் அடுத்தடுத்த விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மூலம் அறிவிப்புகள் வெளியாவதும், அமைச்சர் கவனத்திற்கு சென்ற பின் அவை வாபஸ் பெறப்படுவதும் வாடிக்கையாகி வந்த நிலையில், அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் அரங்கேறும் தொடர் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே அதிகரித்து வரும் சாதிய மோதல் சம்பவங்கள், வகுப்பறைக்குள்ளாகவே கஞ்சா புகைப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் வெளியாகும் புகைப்படங்கள், ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள் என அடுத்தடுத்து அரங்கேறும் அவலச் சம்பவங்கள் பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்மிக சொற்பொழிவு எனும் பெயரில் சென்னை அசோக் நகரில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், சொற்பொழிவாளரை அழைத்தது யார் ? பள்ளிக்கல்வியின் அனுமதியை பெற்று தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டதா ? என்ற கேள்விகளுக்கு தற்போதுவரை விடை கிடைக்காத சூழல் தான் நிலவுகிறது.
சிவகங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்வுக்கான மைதானத்தை சுத்தம் செய்யும் பணிக்கும், விளையாட்டு கம்பங்களை தூக்கும் பணிக்கும் விடுதி மாணவர்களை ஈடுபடுத்துவது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான அரசுப்பள்ளி கட்டடங்கள் தரமற்ற நிலையில் இருப்பதால் எப்போது இடிந்து விழும் என்ற ஆபத்து மிகுந்த சூழலிலேயே பள்ளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழலில், அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் மத்திய அரசின் பி.எம் ஸ்ரீ திட்டத்திலும் அரசியல் காரணமாக இணைய மறுப்பது தமிழக பள்ளிக்கல்வித்துறையை அதள பாதாளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி என கல்வியாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
குழப்பங்கள், குளறுபடிகள், முறைகேடு புகார்கள் நிறைந்திருக்கும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் நிலையில், அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய மகா விஷ்ணு விவகாரம், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திமுகவினரே ராஜினமா செய்ய சொல்லும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
முதலமைச்சருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் நெருக்கமானவராகவும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உற்ற நண்பராகவும் இருப்பதே அன்பில் மகேஷ் மீது நடவடிகை எடுப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான தாக்குதலுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி பின்னணியில் இருக்கும் தகவல் வெளியாகி திமுகவில் உட்கட்சி பூசலை உண்டாக்கியுள்ளது.
திமுகவில் உள்ள மூத்த தலைவர்களுக்குள்ளான உட்கட்சி பூசல்களே முடிவுக்கு வராத நிலையில், உதயநிதி ஸ்டாலின் நண்பர்களான டி.ஆர்.பி. ராஜாவுக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குமான உட்கட்சி பூசல் திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.