உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை நோயை எம் பாக்ஸ் என்று பெயர் மாற்றிய 24 மணி நேரத்துக்குள் ஆப்பிரிக்காவுக்கு வெளியே ஸ்வீடனில் ஒருவரும், பாகிஸ்தானில் மூவரும் எம் பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
டென்மார்க்கில் 1958ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு குரங்குக்கு வந்த வைரஸ் தொற்றுக்கு குரங்கு அம்மை என்று பெயரிடப்பட்டது.
1970ம் ஆண்டில், முதல் முறையாக காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு ஒன்பது மாத ஆண் குழந்தைக்கு குரங்கு அம்மை வைரஸ் தாக்கியது. இன்று வரை மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் தான் இந்த நோய் இருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மனிதர்களுக்கும் இந்த நோய் பரவுகிறது.
மனிதர்களுக்கு எளிதாக பரவும் இந்த வைரசுக்கு கடந்த புதன் கிழமை எம் பாக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.
மேலும் அதே நாளில் உலக சுகாதார அமைப்பு எம் பாக்ஸ் வைரஸ் நோய் குறித்த எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது. இந்த ஆண்டு மட்டும் ஆப்பிரிக்காவில் 14,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 524 பேர் இந்த நோயால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டை விடவும் மிக அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
Mpox என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது முதன்மையாக மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கிறது. இது பெரியம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தை சேர்ந்ததாகும். இது “ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனம்” என்று அழைக்கப்படுகிறது.
Mpox பொதுவாக தோல் கொப்புளங்கள் அல்லது உயர்த்தப்பட்ட கட்டிகளை ஏற்படுத்தும் பாக்ஸ் போன்ற நோயை விளைவிக்கிறது.
பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது மற்ற மனிதர்களுக்கும் எம் பாக்ஸ் வைரஸ் பரவுகிறது.
எம் பாக்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகள் கடித்தாலோ அல்லது எம் பாக்ஸ் பாதிக்கப்பட்ட விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு கொண்டாலோ இந்த நோய் மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கு பரவுகிறது.
எம் பாக்ஸ் பாதிக்கப்பட்ட நபருடன் நீண்டநேரம் நேரடி தொடர்பில் இருந்தாலும், தொற்று பாதித்த ஆடை, படுக்கை, துணிமணிகள் ஆகியவற்றைத் தொடுவதாலும் இந்த வைரஸ் நோய் பரவுகிறது.
காய்ச்சல், தலைவலி, தசைகளில் வலி மற்றும் முகம், கைகள், கால்கள் என உடல் முழுவதும் சொறி சிரங்குகளும் ஏற்படுவதே இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள் ஆகும்.
இந்த நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை உடலில் நீடித்து இருக்கும் என்றாலும், நோயின் அறிகுறிகள் தொற்று பரவி மூன்றிலிருந்து 21 நாட்களுக்கு இடையே தோன்றும் என்று தெரிய வருகிறது.
எம் பாக்ஸ் தொற்று நோய்க்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டு பிடிக்கவில்லை. இருப்பினும் அதற்கான தீவிர மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பெரியம்மைக்காக முதன்முதலில் உருவாக்கப்பட்ட டெகோவிரிமாட் (TPOXX) என்ற ஆன்டிவைரல் மருந்து மூலம் mpox க்கு சிகிச்சையளிப்பது குறித்து ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கடுமையான mpox வைரஸ் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) உரிமம் அளிக்கப் பட்டுள்ளது
உலக நாடுகள் இப்போது எம் பாக்ஸ் வைரஸ் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டிற்குள் நுழையும் மக்களையும் பொருட்களையும் கண்காணிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
தைவான் அரசு நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தி இருப்பதோடு காங்கோ மற்றும் ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயண எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்த நோயாளிகளில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சுவீடனில் ஒருவருக்கு எம் பாக்ஸ் தொற்று இருப்பது கண்டறியபட்டதே உலகை அச்சுறுத்தி உள்ளது. ஏனெனில், ஐரோப்பிய கண்டத்தில் ஒருவருக்கு ஒரு தொற்று நோய் பரவினால் சர்வதேச அளவில் அது வேகமாக பரவும் என்பதால் அச்சம் அதிகரித்துள்ளது.