பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த மாலத் தீவின் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு, அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக இருந்த மாலத் தீவு, இந்தியாவை தேடி வருவது ஏன் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து சீனாவுக்கு நெருக்கமான முகமது முய்சு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அப்போது முதல் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாலத் தீவு அரசு ஈடுபட்டது.
கடல்சார் கண்காணிப்பு பணிகளுக்காக, இந்திய ராணுவம் அதிநவீன ஹெலிகாப்டர்கள், டார்னியர் ரக விமானம் உள்ளிட்டவற்றை மாலத்தீவுக்கு வழங்கியிருந்தது.இந்த கருவிகளை இயக்குவதற்காக சுமார் 100 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருந்தனர். தேர்தல் வாக்குறுதிப்படி, இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றியதால், இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்திய ராணுவத்தை வெளியேற்றிய மாலத்தீவு அரசு சீனாவிடம் ராணுவ உதவிக்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. இதனிடையே இந்தியா – மாலத்தீவு இடையே நடைபெற்ற அரசு முறை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் முகமது முய்சு கலந்து கொண்டதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த மாதம் மாலத்தீவு சென்றிருந்தார். அப்போது முதலே மாற்றங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன.
ஏற்கெனவே கழுத்தை நெறிக்கும் கடனில் சிக்கி தவிக்கிறது மாலத்தீவு. சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் 1.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் நாடுகளுக்கு கடன்கொடுத்து, பின்னர் திருப்பி தர முடியாத சூழல் உருவாகும் போது அந்நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைப்பது சீனாவின் பழக்கம். இலங்கை சீனாவின் வலையில் சிக்கியுள்ள நிலையில், மாலத்தீவுக்கும் வலை விரித்திருக்கிறது சீனா.
சுற்றுலாத் துறையை அதிகம் சார்ந்துள்ள மாலத்தீவு, பல ஆண்டுகளாக கணிசமான கடன்களை வாங்கி குவித்துள்ளது. அதே நேரத்தில் அதன் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்துள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி நாட்டின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 110 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அந்நிய செலவாணி கையிருப்பு சென்ற ஆகஸ்ட் மாத இறுதியில் 437 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது சுமார் ஒன்றரை மாத இறக்குமதிகளை ஈடுகட்ட மட்டுமே போதுமானதாகும் .
மாலத் தீவுக்கு அடுத்த ஆண்டு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலரும், அதற்கடுத்த ஆண்டு ஒரு பில்லியன் டாலரும் தேவைப்படும் என்று உலக வங்கியும் சர்வதேச நிதி ஆணையமும் கணித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கட்டுக்கடங்காத கடனில் இருந்து மீண்டெழவும் மாலத் தீவுக்கு, இந்தியாவின் தேவை முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகி உள்ளது. முக்கியமாக பொருளாதார உதவி மற்றும் இராணுவ வர்த்தக விஷயங்களில், இந்தியாவையே மாலத் தீவு நம்பியிருக்கிறது.
இந்நிலையில் , விரைவில் அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என்று அதிபரின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஹீனா வாலேட் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவின் நிதிச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், மாலத்தீவுக்கு அவசர நிதி உதவியை வழங்க மத்திய அரசு தயாராகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலத்தீவு நாணய ஆணையம் கடந்த மாத இறுதியில், இந்தியாவுடன் 400 மில்லியன் அமெரிக்க டாலர் கரன்சி பரிமாற்ற ஏற்பாட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.
அதன்படி இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயத்தின் கீழ் கிடைக்கும் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாலத்தீவுக்கு இந்தியா உடனடியாக வழங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில் மாலத்தீவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. உடனே பிரதமர் மோடி சரக்கு கப்பல்களில் மாலத்தீவுக்கு தேவையான குடி நீரை அனுப்பி வைத்தார். மாலத்தீவு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவும் மத்திய அரசு தாராளமாக கடன் உதவிகளை வழங்கியது. குறிப்பாக மாலத்தீவுக்கு 2 ஹெலிகாப்டர்கள், ஒரு விமானத்தையும் பரிசாக வழங்கியது.
நன்றி மறந்த மாலத்தீவு அதிபர் , சீனாவுடன் கைக் கோர்த்து, இந்தியா மீது வெறுப்பைக் காட்டினார். இப்போது, நாடு திவாலாகும் நிலையில் , இந்தியாவின் உதவியை நாடுகிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.