மறைந்த இயற்கை விவசாயி மூதாட்டி பாப்பம்மாள் உடலுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள வீட்டில் பாப்பம்மாள் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை எம்.எல்.ஏ. வுமான வானதி சீனிவாசன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், இந்திய திருநாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள், பெண்களின் அடையாளமாகவும், கோவையின் அடையாளமாகவும் திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மதிப்பு மிக்கவராக திகழ்ந்தவர் பாப்பம்மாள் என்றும், பிரதமர் எப்போது சந்தித்தாலும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதையும் நினைவுக் கூர்ந்தார். அவரது ஆத்மா சாந்தியடைய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிராத்திப்பதாக கூறினார்.