அரசு சட்டக் கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடி விடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதி பட்டு தேவானந்தா முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாக சட்டகல்வி இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது எனக் கருத்து தெரிவித்த நீதிபதி பட்டு தேவானந்தா, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பாடம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என தெரிவித்தார்.
மேலும், அரசு சட்டக் கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் கல்லூரிகளை இழுத்து மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வரும் 15-ம் தேதி சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினம் தள்ளிவைத்தார்.