நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகளில் அடுத்தடுத்த விலகல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சீமானின் ஆணவப்போக்கான பேச்சே நிர்வாகிகள் வெளியேற முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்த நாம் தமிழர் கட்சியில், மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் விலகல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளார் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினர்.
அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளார் மணிகண்டனும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியதாக அறிவித்த நிலையில், மருத்துவ பாசறையின் மாநில நிர்வாகியான இளவஞ்சி மற்றும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரையும் விலகியிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது அவருடனான சீமானின் தொலைபேசி உரையாடல் வெளியே கசித்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் கட்சியின் பெண் நிர்வாகியான காளியம்மாளை தரக்குறைவாக பேசுவது இடம்பெற்றிருந்த நிலையில், அது உண்மை தான் என சீமானே பகிரங்கமாக ஒத்துக் கொண்டது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கட்சியின் நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பது, சர்வாதிகாரி போல நடந்து கொள்வது, பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவது, ஆணவப்போக்கான பேச்சு என சீமானின் அநாகரீகமான செயல்பாடுகளே கட்சியிலிருந்து நிர்வாகிகள் கொத்து கொத்தாக வெளியேற பிரதானக் காரணம் என கூறப்படுகிறது.
கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதும், அதனை கேட்கும் போது கட்சியில் விருப்பம் இருந்தால் இருக்கலாம், இல்லையென்றால் வெளியே போகலாம் என அதிகாரத் தொணியில் பேசுவதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் சீமானின் தலைமையில் தொடர விரும்பவில்லை என கட்சியிலிருந்து வெளியேறிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கட்சி நிர்வாகிகள் தவறு செய்தால் அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கும், ஆனால் கட்சித் தலைமையே தவறு செய்தால் யாரிடம் தீர்வு கேட்பது என்ற மனக்குமுறலோடு ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கியிருப்பதால் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு அடியோடு சிதைய தொடங்கியுள்ளது.
சீமானின் எழுச்சியான உரையை நம்பி அவரை தலைமையாக ஏற்றுக் கொண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தங்களுக்கு எந்தவித மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதோடு, ஒரு சிலர் மட்டுமே கட்சியின் முழுமையான செயல்பாடுகளை தீர்மானிப்பதாகவும் கட்சியிலிருந்து வெளியேறும் நிர்வாகிகள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜயை நாடி நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஏராளமான நிர்வாகிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், சீமானின் அணுகுமுறையில் மாற்றம் இல்லையெனில் நாம் தமிழர் கட்சியின் கூடாரம் முழுமையாக காலியாகும் என எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்