அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காத போதுதான் யானைகளால் விபத்துகள் ஏற்படுவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வனத்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :
மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு , அந்த சாலையின் நடுவே சில இடங்களில் வனத்துறை நிலங்கள் வருவதால் சாலைப்பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அதற்கான அனுமதியை வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
யானை , புலி உட்பட வன உயிரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடலோர பகுதிகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வனத்துறை அனுமதி பெறாமல்தான் திருச்செந்தூரில் தெய்வானை யானையை வைக்கப்பட்டிருந்ததாகவும், கோயில் யானைகளுக்கு வனத்துறையிடம் அனுமதி பெறுவது குறித்து அறநிலையத்துறையிடம் பேசி வருவதாகவும் கூறினார்.
திருச்செந்தூர் கோவில் யானையை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு முகாமுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும்.
அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காத போதுதான் யானைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. கோயில் யானைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு அறநிலையத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினருடையது என பொன்முடி கூறினார்.