வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடல் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றம் மற்றும் மழை நீர் தேக்கம் ஆகியவற்றால் கரையோரங்களில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் 2-வது நாளாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 10 அடிக்கும் மேல் கடல் அலை எழும்புவதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பலத்த சூறைக்காற்று வீசுவதால் குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மீனவ கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சுமார் 25 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கடலில் அதிக அளவு சீற்றம் உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பாக நீராட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கடற்கரை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.