தமிழகத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு சுமார் 170 ரூபாய் ஒதுக்கிய நிலையில், பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் , சீரிய தொலைநோக்கு பார்வை கொண்ட, மத்திய அரசு, சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக 3 ஆயிரத்து 295 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
23 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த வளர்ச்சித் திட்டத்தில் தமிழகமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ள எல்.முருகன், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நந்தவனம் பாரம்பரிய பூங்காவின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு 99 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உதகையில் உள்ள தேவாலா மலர்கள் பூங்காவின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு 70 கோடியே 23 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் மோடிக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.