வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமின் மிகப் பெரிய தீவான பு குவோக் அருகே உள்ள ஹான் மே ரூட் ங்வோய் தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பு நகரை சேர்ந்த அழகுராஜன், ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி, பீமநகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகியோரும், சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும், தருமபுரி, பழனியைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர். இதுதவிர ஆந்திராவை சேர்ந்த 3 பேர், கேரளாவை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 15 இந்தியர்கள் வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வியட்நாமில் இந்தியர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்தியர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகமும், துணைத் தூதரகமும் அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















