தவெக உடனான கூட்டணி வாய்ப்பை இபிஎஸ் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு இருவரும் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் முடிவுக்குப் பிறகு இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகளாலும், திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடுத்த தவறான முடிவாலும், 25 எம்எல்ஏக்கள் எதிரான நிலைபாட்டை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
2024 தேர்தலில் பாஜக, பாமகவின் கூட்டணி வாய்ப்பை தன்னிச்சையாக நிராகரித்ததால், திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியதாகவும், இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால், பல வேட்பாளர்கள் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு, பல கோடி ரூபாய்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
2026 தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகத்தை தன்னிச்சையாக வெளியேற்றியதோடு, தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கட்சி எந்த நிலைக்கு சென்றாலும், தான் சொல்வதைத்தான் ஏற்க வேண்டும் என்ற மனப்பான்மையில் 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை நீக்கியுள்ளதாகவும், அதனை மறுபரிசீலனை செய்து, அதே பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சசிகலா மற்றும் டிடிவி தினகரனிடம் பேசி அவர்களை மீண்டும் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளதால், இது மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
















