போதைப்பொருள் பழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது என்பது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்குடன் திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஜாபர் சாதிக் மீதான குற்றச்சாட்டு வந்தபோது, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது என தெரிவித்தார்.
ஆனால், தவெக அமைச்சர் ஒருவர் மைதானத்தில் பவுடர் வைத்திருந்ததை உலகமே பார்த்தது எனக்கூறிய உதயநிதி, இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார், சேப்பாக்கம் மைதானத்தில் நடந்ததற்கான விளக்கத்தை தாம் அளித்துவிட்டேன் என்றும், அதில் முரண்பாடு இருந்தால், அந்த நிகழ்வு நடந்தது திமுக ஆட்சியில் தான் எனவும் கூறினார்.
தன் மீது கூறப்படும் புகார் திமுக ஆட்சி காலத்தில் நடந்தது என்றும், அப்படியானால் திமுக ஆட்சி காலத்தில் போதைப் பொருள் விற்றதை ஒப்புக் கொள்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினார். இதனால், சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
















