நாடு முழுவதும் மாவட்டந்தோறும் முதியோர் இல்லங்களை அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ வசதியுடன் கூடிய முதியோர் இல்லங்களை அமைக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, 2022-க்கு பிறகு இந்த வழக்கு ஏன் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பியது.
அப்போது, பலமுறை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை உயர் நீதிமன்றங்கள்தான் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, அது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதனை செயல்படுத்த உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் எனத் தெரிவித்தது.
முதியோர் இல்லங்களை அமைப்பது மற்றும் அவற்றில் தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பான தற்போதைய நிலை குறித்த விரிவான பதிலறிக்கையை 4 வாரங்களில் சமர்ப்பிக்குமாறு
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அனைத்து மாநில தலைமை வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு உரிய விளக்கத்தை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
















