சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில், நேரப் பிரச்னை காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பேருந்துகள் இயக்க நேரம் தொடர்பாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை மறித்து நிறுத்தியதாக கூறப்படும் நிலையில், இருவரையும் போக்குவரத்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதைக் கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பேருந்துகளை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர், தனியார் பேருந்து நடத்துநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின்னர் அனுப்பி வைத்துள்ளனர். நடத்துநரை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதனால், ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















