மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம்,கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தான் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துள்ள நடவடிக்கைகள் கேலிக்கூத்தான செயல் – இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
குறுகிய காலத்தில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதை தடுக்க இதுவரை எந்த வழிமுறைகளும் இல்லை என்று குறிப்பிட்டனர்.
இதுபோன்ற அசாதாரண சூழலில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேசமயம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது –
ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க மாற்றி பரிந்துரைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















