இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள யஷோ பூமியில் இந்தியா சார்பில் நடைபெறும் “செமிகான் இந்தியா 2026” என்ற மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலீடு, புத்தாக்கம் மற்றும் திறமை மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இது மட்டுமின்றி 52 நாடுகளின் பிரதிநிதிகள், 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 50 ஆயிரம் பார்வையாளர்களும் வருகை தந்துள்ளனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இதே செப்டம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு முன்பு மும்பையில் ‘குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்’ (Global FinTech Fest) நடைபெற்றதாகவும், அதில், ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகளை வழங்குவது குறித்த விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதே காலகட்டத்தில், இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக வழித்தடம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது எனவும் கூறினார்.
மேலும், செப்டம்பர் மாதத்திலேயே இந்தியாவின் காலாண்டு ஜிடிபி அறிக்கை வெளியிடப்பட்டது என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இத்தகைய சவாலான காலகட்டத்திலும் இந்தியா 7.8 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை எட்டியதாக தெரிவித்தார்.
















