கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்த நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டை நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆயுட்கால ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது
இந்த ஒப்பந்தம் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரு தரப்பு பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமான உடன்பாடு எட்டப் பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தின்படி, கிரீன்லாந்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் அமெரிக்கா நிரந்தரமாக கவனித்துக் கொள்ளும் என்று கூறியுள்ள அதிபர் ட்ரம்ப் திட்டமிடப்பட்ட ராணுவக் குவிப்பு குறித்து விரிவாக எதுவும் குறிப்பிட வில்லை என்றாலும் கிரீன்லாந்தில் விரைவில் பெரிய அளவிலான அமெரிக்க ராணுவ இருப்பு நிறுவப்படும் என்று மட்டும் கூறியுள்ளார்.
கிரீன்லாந்தின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் எவராலும் அது குறித்து எதுவும் செய்ய முடியவில்லை என்றும், மிக முக்கியமான இந்த விவகாரத்தில் நிரந்தரமான மற்றும் உறுதியான தீர்வை வழங்கிய அதிபர் என்பதில் பெருமை கொள்வதாக கூறியுள்ள ட்ரம்ப், இது அமெரிக்காவிற்கு ஒரு கனவு நனவாகும் தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.
‘முடிவில்லாத காலத்திற்கான’ ஒப்பந்தத்துக்கு முடிவு என்பதே இல்லை என்றும், இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா மிகுந்த பெருமையும் கௌரவமும் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் இறையாண்மை, நிலப்பரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமையை முழுமையாக இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கிறது என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். மேலும் வட அட்லாண்டிக் மற்றும் நேட்டோ கூட்டமைப்பின் பாதுகாப்பை பலப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த கால வரம்பற்ற இந்த ஆயுட்கால ஒப்பந்தம், கிரீன்லாந்தையும் அமெரிக்காவின் சொந்தப் பாதுகாப்பையும் காக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுப்பதையும் உறுதி செய்துள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் அமெரிக்கப் படைகளின் தளம், போர் விமானங்கள் பறப்பதற்கான உரிமை மற்றும் ராணுவ நிலைகளை விரிவுபடுத்துவதற்கான முழு அனுமதி அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய எதிரிகளான சீனா மற்றும் ரஷ்யா போன்ற நேட்டோ அல்லாத நாடுகள் கிரீன்லாந்தில் ராணுவத் தளம் அமைப்பதோ அல்லது படைகளை நிலைநிறுத்துவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
கிரீன்லாந்தில் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் முக்கியமான துறைகளில் முதலீடுகள் செய்ய விரும்பும் நாடுகள் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு அமெரிக்காவின் எழுத்துப் பூர்வ ஒப்புதல் அவசியமாக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்து என்றென்றும் வட அமெரிக்கா பாதுகாப்பின் ஒரு பகுதியாகத் திகழும் என்றும் இப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் எதிரி நாடுகள் நுழைவது இனி முற்றிலுமாக தடுக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளால் அமெரிக்க வரி செலுத்துவோருக்கு எவ்வித கூடுதல் நிதிச் சுமையும் ஏற்படாது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக அதிபர் ட்ரம்ப்பின் மிகப்பெரிய பெரிய வெளியுறவு சாதனையாக இது அமைந்துள்ளது.
















