FQL செயலி மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கைதான மதுரையைச் சேர்ந்த தம்பதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேலூரை அடுத்த கட்டையம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி தம்பதி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
FQL மற்றும் VG செயலிகள் மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய்க்கான முதலீடுகளை பெற்றதாக அவர்கள் மீது, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இதற்கிடையே, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி தம்பதி உள்ளிட்ட 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
















