தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றெடுக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கப்படாது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, கர்நாடகாவைச் சேர்ந்தவரை திருமணம் செய்த நிலையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 17ஆம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரம் பெற அவருக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆதார் அட்டையில் மைசூரு முகவரி இருந்ததால் மோதிரம் வழங்கப்படவில்லை.
இது குறித்து விளக்கமளித்த பொது சுகாதாரத்துறை, ஆவணங்களின்படி அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பயனடைய முடியாது என தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அவருக்கு அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















