வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது…
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வெற்றிப் பயண திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்திற்கு எதிராக ஈரோட்டை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், வெற்றிப் பயண திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும் என வேதனை தெரிவித்துள்ளார்.
பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமையை மீறும் செயல் எனவும்
அரசாணையின்றி முதலமைச்சர் அறிவிப்பின் மூலம் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படுவதால் அதனை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் பேருந்துகளுக்கு இழப்பீடு வழங்கி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள மனுதாரர்,
வழக்கு முடியும் வரை வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்…
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே அரசு பேருந்துகளில் வெற்றி பயணத்திட்டம் தொடங்கப்பட்டதால் 3 நாட்களில் தனியார் பேருந்துகளில் 50 சதவீதம் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
















