பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால அர்ப்பணிப்பு மிக்க பொதுச்சேவைக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் அனைத்து தரப்பினரின் வளம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரதமர் மோடியின் பயணம், மக்கள் நல ஆட்சிக்கு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
மக்களை மையப்படுத்திய கொள்கைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவெடுப்பதில் உறுதித்தன்மை மூலம், செயல்திறன்மிக்க அரசியலுக்கு புதிய முன்னுதாரணத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது சேவை மேலும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துவதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவைப் பயணத்திற்கு பாஜக தலைவர் நிதின் நபின் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘நாடு முதலில்’ என்ற உணர்வுடன் மக்கள் சேவைக்கும் நல்லாட்சிக்கும் பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவால்களை வாய்ப்புகளாக மாற்றி, உலக அரங்கில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ள பிரதமரின் உழைப்பும் உறுதியும் பாராட்டுக்குரியது என்றும், தேசக் கட்டமைப்பிற்கான அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கூட்டுக் கனவை நனவாக்கும் பயணம் வெற்றிகரமாக முன்னேறும் என்றும் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
அரசு பதவிகளில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 2001-ல் குஜராத் முதலமைச்சராகத் தொடங்கிய பிரதமர் மோடியின் பயணம், தேசக் கட்டமைப்பு, நல்லாட்சி, மக்கள் நலனின் அடையாளமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு துறைகளில் இந்தியா தற்சார்பை நோக்கி முன்னேறி வருவதாகவும், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு பயணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியின் தலைமையில், உலகின் 4-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாக ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைப் பயணத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடும்ப அரசியல் பின்னணி அல்லது பெரும் செல்வாக்கு இல்லாமல், பாஜக தொண்டர் ஒருவர் நாட்டின் உயர்ந்த பொறுப்பை அடைய முடியும் என்பதற்கு பிரதமர் மோடியின் பயணம் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவைப் பயணம், ஜனநாயகத்திற்கு முக்கியமான செய்தியை வழங்குவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையில் தெளிவான தொலைநோக்கு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறன் குறிப்பிடத்தக்கவை என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். பெருந்தொற்று, போர்கள் மற்றும் புவிசார் சவால்களுக்கு மத்தியில், உள்கட்டமைப்பு, நலத்திட்டங்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
ஒரு தலைமுறையை வடிவமைக்கும் வாய்ப்பு சில தலைவர்களுக்கே கிடைக்கும் என்றும், நாட்டின் எதிர்காலப் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதைவிட அரிதானது என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
















