பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பு காரணமாக கோவாவில் காலமானார்.
கோவாவின் டோனா பவுலா பகுதியில் உள்ள தனது வீட்டில் நானா படேகர் சுயநினைவின்றி இருந்த நிலையில், குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நானா படேகருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
அவரை காப்பாற்ற சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 75 வயதான நானா படேகர் அதிகாலை 5.20 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மகாராஷ்டிராவில் 1951-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்த நானா படேகர், நாடகம் மற்றும் திரைப்படங்களில் பன்முகத் திறமையால் பிரபலமானார்.
இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், பரிந்தா, பிரஹார், அங்கார், கிராந்திவீர், திரங்கா, காமோஷி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் திரைப்படத்திலும், ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நானா படேகர் நடித்துள்ளார்.
நானா படேகர் மற்றும் மனைவி நீலகாந்தி படேகர் ஆகியோர் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்கு மல்ஹர் படேகர் என்ற மகன் உள்ளார்.
மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் ‘நாம் பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, பல்வேறு சமூகப் பணிகளையும் நானா படேகர் மேற்கொண்டுள்ளார்.
திரைப்படங்களில் சிறப்பான நடிப்பிற்காக 3 தேசிய திரைப்பட விருதுகளை வென்ற நானா படேகருக்கு, 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
நானா படேகரின் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
















