இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, கடும் எதிர்ப்பை சந்தித்த தவெக வேட்பாளர் சத்தியபாமா, சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல் 4 சுற்றுகள் வரை தவெக வேட்பாளர் சத்தியபாமா பின்னடைவை சந்தித்தார்.
இதையடுத்து 5வது சுற்றில் முன்னிலை பெற்ற அவர், 23 சுற்றுகள் முடிவில் 66 ஆயிரத்து 841 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
திமுக சார்பில் போட்டியிட்ட சுகன்யா, 57 ஆயிரத்து 370 வாக்குகளுடன் இரண்டாம் இடம்பிடித்து தோல்வியை தழுவினார். இதன்மூலம் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9 ஆயிரத்து 471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஏப்ரலில் நடந்த பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக, இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பானுமதி 45 ஆயிரத்து 280 வாக்குகளுடன் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, 5 ஆயிரத்து 268 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட லட்சுமணன் ஆயிரத்து 157 வாக்குகளும் மட்டும் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.
தாராபுரம் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 19 பேர் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது
















