ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 3-கட்ட போர்நிறுத்தத்தை இந்தியா முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2022-ல் தொடங்கிய ரஷ்யா- உக்ரைன் போர் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நீடித்து வருகிறது. அதிபராக வந்தால் 24 மணிநேரத்தில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று தேர்தல் பிரச்சாரத்திலேயே அறிவித்த ட்ரம்ப், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்றதும், உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இது தொடர்பாக ரஷ்ய அதிபரை அலாஸ்காவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷ்யா முன்வைத்த போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த உக்ரைன், ரஷ்யா மீதான தாக்குதல்களை அதிகரித்தது. பதிலுக்கு உக்ரைன் மீதான தொடர் தாக்குதல்களை ரஷ்யாவும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மிக சிறந்த யோசனைகளை வழங்கிய பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் கடந்த வாரம் முதல்முறையாக பொதுவெளியில் நன்றி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து எகிப்து, துருக்கி மற்றும் அமெரிக்கா கொடுத்துள்ள போர் நிறுத்த முன்மொழிவுகளுடன் இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவையும் பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறியிருந்தார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 3ம் தேதி முதல் முறையாக உக்ரைனுக்குச் சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்க.ர் இந்தியாவின் ரஷ்ய- உக்ரைன் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் அரசிடம் கொடுத்திருந்தார்.
எரிசக்தி வசதிகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல், கருங்கடல் துறைமுகங்கள் வழியாக தானியங்கள் மற்றும் எரிசக்தி தொடர்ந்து செல்வதை உறுதி செய்தல் மற்றும் கருங்கடலில் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகிய மூன்று நடவடிக்கைகளை இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவு வலியுறுத்தியுள்ளது.
உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கடல்சார் வர்த்தகத்தில் ஏற்படும் இடையூறுகள் உட்பட பல்வேறு பகுதிகளில் நடக்கும் உக்ரைன் போரை ஒரே நேரத்தில் தீர்த்து வைக்க இந்தியாவின் முன்மொழிவு உதவுகிறது.
எகிப்தும் துருக்கியும், கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை நிறுத்தி, தானியங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில் முதன்மையாகக் கவனம் செலுத்தியிருந்த நிலையில், அமெரிக்காவின் முன்மொழிவு, எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ‘எரிசக்தி போர்நிறுத்தத்தை’ மையமாகக் கொண்டிருந்தது.
எனவே, எகிப்து, துருக்கி மற்றும் அமெரிக்கா முன்னெடுத்த போர் நிறுத்த முயற்சிகளை விட இந்தியாவின் முன்மொழிவு விரிவானதாக உள்ளதாக கருதப்படுகிறது.
இது உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்புகளை இணைப்பதோடு, சரக்குப் போக்குவரத்தின் தடையற்ற ஓட்டத்தையும் உறுதி செய்கிறது.
















