ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரியில் சுதந்திர இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிராமத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘ஸ்வர்ணகிரி’ என அறிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2001-ம் ஆண்டு கர்நாடகாவின் புகழ்பெற்ற ‘கோலார் தங்க வயல்’ (KGF) மூடப்பட்டது. . உலகிலேயே மிக ஆழமான 3.2 கிலோமீட்டர் சுரங்கமாக இருந்த KGF செயல்பாட்டில் இருந்த சுமார் 120 ஆண்டுகளில் 800 முதல் 900 டன் வரையிலான தங்கத்தை இந்தியாவுக்கு அளித்துள்ளது. அதன் பிறகு அம்மாநில அரசு ‘ஹட்டி’ (Hutti) சுரங்கத்தில் மட்டுமே தங்கம் வெட்டியெடுக்கப்பட்டு வந்தது.
கடந்த 1990-களிலேயே ஆந்திராவின் ஜொன்ன கிரியில் தங்கம் இருப்பதற்கான முதற்கட்ட ஆராய்ச்சிகளை ‘ஜியோ சூர்’ நிறுவனம் தொடங்கியது.
இந்த ஸ்வர்ணகிரியில் சுமார் 82 லட்சம் டன் தாதுக்கள் இருப்பதாகவும், ஒரு டன் தாதுவிலிருந்து சராசரியாக 1.49 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 12 டன் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
KGF போல பூமிக்கு அடியில் ஆழமாகச் செல்லாமல், இது நிலப்பரப்பிலேயே தோண்டப்படும் திறந்தவெளிச் சுரங்கமாக உருவாக்கப்பட்டுள்ள இது சுமார் 9 ஆண்டுகள் வரை தடையின்றி இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் த்ரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் டெக்கான் கோல்ட் மைன்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் சுமார் 405 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தத் திட்டத்தை ‘ஜியோ மைசூர்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதற்காக, ஆந்திர மாநில அரசு சுமார் 1,500 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இதில், 600 ஏக்கர் அளவிலான சுரங்க பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, 2 ஆம் கட்ட பணிகளுக்காக அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.
இந்த தங்க சுரங்கத்தில் இருந்து முதல் ஆண்டில் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு, 900 கிலோ தங்கம் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின், ஆண்டுக்கு, 2,000 கிலோ தங்கம் என்ற அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், அதில் 85 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சுரங்கத்தில் உற்பத்தியாகும் தங்கத்தின் மதிப்பில் 4 சதவீதம் ராயல்டி தொகை என்ற கணக்கில் ஆண்டுக்கு 57 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் இந்தச் சுரங்கத்தின் உற்பத்தி 900 கிலோவை எட்டும் போது அரசின் வருவாய் 144 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தங்கம் இறக்குமதி ஆண்டுக்கு 800 முதல் 1000 டன்னாக இருக்கும் நிலையில் ஸ்வர்ணகிரியில் ஆண்டுக்கு ஒன்று முதல் 1.3 டன் தங்கம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக சிகுர்குண்டா-பிசனாதம் தொகுதியில் 2.2 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாது வளங்கள் இருப்பதாக மாநில அரசு மதிப்பிட்டுள்ளது மேலும் ஒரு டன்னுக்கு சராசரியாக 5.64 கிராம் தங்கத் தரம் உள்ளதாகவும் ஒருங்கிணைந்த சுரங்க இணையதளம் மூலம் ஏலம் விடப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள போக்சம்பள்ளி, ராமகிரி மற்றும் ஜவகுலா உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த ஆய்வுகள் அப்பகுதிகளிலும் ராமகிரி மற்றும் வேலிகல்லு பச்சைக்கல் மண்டலங்களிலும் தரமான தங்கம் இருப்பதற்கான வாய்ப்புக்களைக் கண்டு பிடித்துள்ளன.
இவை எல்லாம் கர்நாடகாவின் புகழ்பெற்ற ‘கோலார் தங்க வயல்’ (KGF) போன்ற பெருமையை இந்த ஸ்வர்ணகிரி திட்டம் ஆந்திராவுக்குப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















