இரட்டைக் கொலை வழக்கில் இருந்து இராஷ்டிரிய ஜனதா தள முன்னாள் எம்.பி பிரபுநாத் சிங் விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 1995-ஆம் ஆண்டு, பீகாா் சட்டப்பேரவைத் தோ்தலின்போது சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் மாற்று வேட்பாளருக்கு வாக்களித்ததாகக் கூறி வாக்காளர்களை பிரபுநாத் சிங் துப்பாக்கியால் சுட்டார். இதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பிரபுநாத் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று சாப்ரா நீதிமன்றனம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போதிய சாட்சியங்கள் இல்லாததால் பிரபுநாத் சிங் உள்ளிட்டோர் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர்.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரபுநாத் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. மேலும், இரட்டைக் கொலை வழக்கில் பிரபுநாத் சிங்கின் தண்டனை விவரம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.