லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரூபாய் 950 கோடி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத்துக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
பீகாரில் கடந்த 1992-1995 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கால்நடை தீவனம், மருந்துகள் மற்றும் செயற்கை கருவூட்டல் கருவிகள் வாங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து, அரசு கருவூலத்தில் இருந்து மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பணம் கையாடல் செய்ததாகக குற்றச்சாட்டப்பட்டது. இதற்காக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இவ்வாறு மாநில அரசின் கருவூலத்தில் இருந்து ரூபாய் 950 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ, லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக ஆறு வழக்குகளைப் பதிவு செய்தது. டொரண்டா கருவூல மோசடி வழக்கில், லாலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 60 லட்சம் அபராதம் விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.