சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி வரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தி.மு.க.வில் இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சியில் 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வருமான வரித்துறையினரும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மாதம் 13-ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மறுநாள் அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர், நெஞ்சுவலி, மருத்துவமனை, அறுவைச் சிகிச்சை என பல சம்பவங்கள் அரங்கேறி, இறுதியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை, கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியை 25-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜி வழக்கை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. அதேசமயம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. ஆகவே, இன்று காலை காணொளிக் காட்சி வாயிலாக சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, வரும் 28-ம் தேதிவரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.