தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 27-ம் தேதி செல்கிறார்.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத்தின் காலம் விரைவில் முடிவடைய இருப்பதால், நவம்பர் மாதம் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாதம் தொடக்கத்திலோ சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடக்கி வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 27-ம் தேதி தெலங்கானாவுக்குச் செல்லவிருக்கிறார்.
ஐதராபாத்திலிருந்து நேராக கம்மம் மாவட்டத்திற்குச் செல்லும் அமித்ஷா, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இக்கூட்டத்திற்கு சுமார் 2 லட்சம் பேரை திரட்டும் பணியில் பா.ஜ.க. தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. தெலங்கானாவில் 2 முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பி.ஆர்.எஸ். அரசு மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
இம்மாநிலத்தில் மொத்தம் 119 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில், பி.ஆர்.எஸ். கட்சி 115 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக இருக்கின்றன. பா.ஜ.க. முந்திக் கொண்டு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறது. இதற்காக, தமிழகம் உட்பட சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களைக் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது.